இலவச விளம்பர தூதராக இருந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் படம் பால் பாக்கெட்டில் இருப்பது உண்மையா?.. மறுப்பு தெரிவித்தது கர்நாடக பால் சம்மேளனம்

பெங்களூரு: கர்நாடக பால் சம்மேளனத்தின் இலவச விளம்பர தூதராக இருந்த புனித் ராஜ்குமாரின் புகைப்படம் பால் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளதாக வௌியான செய்தி தவறானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தார். அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய அவரது மறைவுக்கு இன்றும் மாநிலம் முழுவதும் இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மறைந்த நடிகரின் உருவம் அச்சிடப்பட்ட பால் பாக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  புனித் ராஜ்குமாரின் உருவம் கொண்ட புதிய பால் பாக்கெட்டை கர்நாடக பால் சம்மேளனம் (கேஎம்எஃப்) அறிமுகப்படுத்திய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வைரல் செய்தியை பலரும் பாராட்டினர். காரணம், புனித் ராஜ்குமார் கிட்டதட்ட 10 ஆண்டுக்கு மேலாக கர்நாடக பால் சம்மேளனத்தின் விளம்பர தூதராக இருந்தார். ஆனால் அதற்காக எவ்வித ஊதியமும் வாங்கவில்லை. அவரது தந்தையான மறைந்த டாக்டர் ராஜ்குமாரும் கூட விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால், கர்நாடக பால் சம்மேளன தயாரிப்புகளை இலவசமாக விளம்பரப்படுத்தினார்.

இந்நிலையில், பால் பாக்கெட்டில் புனித் ராஜ்குமாரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்படுவது உண்மையா? என்று கர்நாடக பால் சம்மேளன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘புனித் ராஜ்குமாரின் புகைப்படத்துடன் கூடிய பாக்கெட் எதுவும் அச்சிடப்படவில்லை. சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது, தவறான செய்தி’ என்று தெளிவுபடுத்தினர்.

Related Stories: