புரோ கபடி லீக் தொடர்: தெலுங்கு டைட்டன்ஸ்-பாட்னா, பெங்கால்-ஜெய்ப்பூர் இன்று மோதல்

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 26வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வெற்றிவாய்ப்புடன் இருந்த குஜராத் ஜெயன்ட்ஸை கடைசி நேரத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வீரர்கள் 38-36 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினர். குஜராத் அணியின் ரெய்டர் ராகேஷ் 19 பாயின்ட்கள் குவித்தும் அந்த அணியினர் செய்த சில தவறுகளால் வெற்றிவாய்ப்பு பறிபோனது.

இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியுடன் புனேரி பல்டன் மோதியது. கண்டிப்பாக வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடிய புனேரி பல்டன் அணி வீரர்கள் கட்டுக்கோப்பாகவும் நம்பிக்கையாகவும் ஆடினர். இதனால் முதல் பாதியில்  அந்த அணி 18-13 என்று முன்னிலை பெற்றது. ஆனால் பிற்பாதியில் நிலைமை தலைகீழாக மாறியது. சாம்பியன் அணியான பெங்களூரு வீரர்கள் எழுச்சி பெற்றனர். கேப்டன் பவன் செராவத் தனது ஆட்டத்திறன் மூலம் 11 புள்ளிகள் எடுத்தார்.

இறுதியில் 40-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ், புனேரி பால்டனை வீழ்த்தியது. இதன் மூலம் 6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 4 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டை என்று 23 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பெங்கால் வாரியர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும், இரவு 8.30 மணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

Related Stories: