சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ராமாபுரம்-முகலிவாக்கம் சந்திப்பில் மேம்பாலம் ரூ.314 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ராமாபுரம் -முகலிவாக்கம் சந்திப்பில் மேம்பாலம் கட்ட ரூ.314 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராமாபுரம்-முகலிவாக்கம் சந்திப்பு வழியாக தினமும் 1.5 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. இதனால், அந்த சாலை சந்திப்புகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, தான் ராமாபுரம் சந்திப்பில் புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று ராமாபுரம்- முகலிவாக்கம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க ரூ.314 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையின் போது, சென்னை பெருநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல பணிகளில் மவுண்ட் பூந்தமல்லி ஆவடி சாலையில் ராமாபுரம் மற்றும் முகலிவாக்கம் சந்திப்புகளில் 3.14 கி.மீ நீளத்திற்கு உயர் மட்ட சாலை மற்றும் மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் உயர் மட்ட சாலை சந்திப்பில் பாலம் அமைக்கப்படும் ஆகிய இரண்டு பணிகள் சென்ைன மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர நெடுஞ்சாலை சார்பில் உயர் மட்ட சாலையுடன் மேம்பாலம் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விரிவான அறிக்கை தயார் செய்தது. அதன்படி மவுண்ட்-பூந்தமல்லி-ஆவடி சாலையை இணைக்கும் வகையில் 3140 மீட்டரில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் இரண்டு வழிப்பாதைகளில் நான்கு வழித்தடமாக 7.5 மீட்டர் சாலை மற்றும் 0.5 மீட்டர் நடைபாதைகள் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் அமைக்க ரூ.352 கோடி கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை கவனமுடன் பரிசீலித்த அரசு மவுண்ட் பூந்தமல்லி-ஆவடி சாலையில் இருந்து ராமாபுரம், எல்அண்ட் டி, டிஎல்ப் வழியாக மியாட் மருத்துவமனை முதல் முகலிவாக்கம் வரை பல்லடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) மூலம் கட்டப்படுகிறது. 3 கிமீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை அமைப்பாக கட்டப்படும் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் ராமாபுரம் சாலை சந்திப்பு, டிஎல்எப் சந்திப்பு மற்றும் முகலிவாக்கம் சந்திப்பை மவுண்ட்-பூந்தமல்லியில் கடக்க வாகன ஓட்டிகளுக்கு உதவும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: