காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்; மும்பையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு உளவுத்துறை எச்சரிக்கையால் நடவடிக்கை

மும்பை: காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கக் கூடும் என்று உளவுத்துறை  எச்சரித்துள்ளதை தொடர்ந்து  மும்பை நகர் முழுவதும் போலீசார் உஷார்  படுத்தப்பட்டுள்ளனர்.   பஞ்சாப் மாநிலம்,  லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம்  காலிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டை  வெடிக்கச் செய்தனர். இதில் ஒருவர்  பலியானார். சிலர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்று இரவு பிறக்கும்  2022ம் ஆண்டு புத்தாண்டின் போது மும்பையில்  காலிஸ்தான் தீவிரவாதிகள்  தாக்கக் கூடும் என்று உளவுத்துறை ரகசிய எச்சரிகை விடுத்துள்ளது. இதனால்  உஷாராக இருக்குமாறு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும்  மும்பை போலீஸ்  அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அனைத்து துணை போலீஸ்  கமிஷனர்களுக்கும் அனைத்து போலீஸ் நிலையங்களின் சீனியர்  இன்ஸ்பெக்டர்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள்  தெரிவித்தன.

மும்பையில் ரயில்வே போலீஸ் கமிஷனர்  கைசர் நேற்று   கூறியதாவது: காலிஸ்தான் தீவிரவாதிகள் எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில்  உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்,  பாந்த்ரா, சர்ச்கேட், குர்லா,  மும்பை சென்ட்ரல், தாதர், உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் 3000க்கும் மேற்பட்ட ரயில்வே  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மும்பை முழுவதும்  இன்றும் நாளையும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பொது இடங்களில் மக்கள்  அதிக அளவில் கூட வாய்ப்பு உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை  சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்  நடத்தலாம் என வந்துள்ள ரகசிய தகவல் காரணமாக  மும்பை முழுவதும் போலீசார்  உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,  மும்பை போலீசார் அனைவருக்கும் இன்று  விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.  அனைத்து போலீசாரும் வெள்ளிகிழமை பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. ரோந்து  பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: