போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்த குழு 3ம் கட்ட பேச்சுவார்த்தை

தாம்பரம்: போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தகுழு 3ம் கட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. இதன்படி 13வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 31.8.2019 ஆண்டு நிறைவடைந்தது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடித்திருந்தால் தொழிலாளர்களுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை சம்பள உயர்வு கிடைத்திருக்கும்.

ஆனால் அப்போது அதிமுக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. பேச்சுவார்த்தை நடத்தக்கோரி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து 14வது ஊதிய ஒப்பந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 5ம் தேதி நடைபெற்றது. 2ம் கட்ட பேச்சுவார்த்தை இந்தாண்டு பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு தொமுச, சிஐடியு உட்பட 11 தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 25, 26, 27 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து  இடைக்கால நிவாரணத் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தி  வழங்கப்பட்டது. இதற்கிடையே பிப்ரவரி 26ம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் 27ம் தேதி போராட்டத்தை கைவிட்டனர். இதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்தவுடன் பேச்சு வார்த்தை தொடங்கும் என போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என தொடர்ந்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் அனைத்து போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதன்பிறகு நவம்பர் மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. இதையடுத்து இன்று பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. இதன்படி சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி பள்ளியில் 14வது ஊதிய ஒப்பந்த 3ம் கட்ட பேச்சுவார்த்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நிதித்துறை இணைச்செயலாளர் அருண் சுந்தர் தயாளன், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு உறுப்பினர் செயலாளர் அன்பு ஆபிரகாம், துணைக் குழு உறுப்பினர்கள் தொமுச, சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உட்பட 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Related Stories: