திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை!: தடயங்களை மறைக்க தீ வைத்துச்சென்ற கொள்ளையர்கள்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தலைமை தபால் நிலைய உதவி அதிகாரி வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை தடயங்கள் சிக்காமல் இருக்க கொள்ளையர்கள் வீட்டிற்கு தீ வைத்திருப்பதால் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. திண்டுக்கல் தலைமை தபால் நிலைய உதவி அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் மணிமாறன். இவரது வீடு திருநகரில் உள்ளது. சில நாட்களாக திண்டுக்கல் அடுத்த நந்தவனாம்பட்டியில் உள்ள மகன் அரவிந்தன் வீட்டில் மனைவியுடன் மணிமாறன் தங்கியுள்ளார். வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்த கொள்ளையர்கள். நேற்று இரவு மாடி வழியாக சென்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 25 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளை சம்பந்தமான தடயங்கள் போலீசுக்கு கிடைக்காமல் இருக்க வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். மணிமாறன் வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், மகன் அரவிந்தனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பாத்திரங்கள், கல்வி சான்றிதழ்கள், வீட்டு பத்திரம், பட்டுபுடவைகள் என அனைத்தும் எரிந்து சேதமடைந்திருக்கிறது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதும், பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தான் இது விபத்து அல்ல கொள்ளையர்கள் நடவடிக்கை என்று புரிந்துள்ளது.

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் அரவிந்தன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஏற்கனவே தீ அணைந்திருந்த நிலையில் புகையை கட்டுப்படுத்தினர். கொள்ளை தொடர்பாக மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து போலீசார் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள், வீட்டுக்கு தீ வைத்து சென்ற சம்பவம் திண்டுக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: