கர்நாடகாவிலிருந்து சித்தூருக்கு பால்வேனில் கடத்திய ₹20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், கஞ்சா பறிமுதல்

* 2 பேர் கைது

* 4 தப்பியோட்டம்

சித்தூர் : கர்நாடகாவிலிருந்து சித்தூருக்கு பால்வேனில் கடத்திய ₹20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக, 2 பேரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.  சித்தூர் தாலுகா காவல் நிலையத்தில் டிஎஸ்பி சுதாகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலைய்யா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணா, நாகசவுஜன்யா மற்றும் போலீசார் இன்று(நேற்று) காலை சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் மாபாட்சி கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக வந்த பால்வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த 6 பேர் தப்பியோட முயன்றனர். அதில், 2 பேரை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர். மீதமுள்ள 4 பேர் தப்பியோடிவிட்டனர். பால்வேனை போலீசார் சோதனை செய்தனர். அதில், 10 ஆயிரம் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், 1 கிலோ 6 கிராம் கஞ்சி இருந்தது தெரியவந்தது. மதுபாட்டில்களின் மதிப்பு ₹20 லட்சம், பிடிபட்ட பால்வேன் ₹10 லட்சம் என மொத்தம் 30 லட்சம் ஆகும்.

பிடிப்பட்ட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பூதலப்பட்டு அடுத்த புண்ணியசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக்(24), பூத்தட்டு அடுத்த ரால்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்பாபு(36) என்பது தெரியவந்தது. மேலும், தப்பி ஓடியவர்கள் சித்தூர் பகுதியை சேர்ந்த உமாசங்கர் மற்றும் சக்ரி, அரகொண்டா பகுதியை சேர்ந்த பிரதாப், பெங்களூரை சேர்ந்த வேணு ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

அவர்களை மிக விரைவில் கைது செய்வோம். கைது செய்தவர்களிடம் விசாரணை செய்ததில் முக்கிய குற்றவாளியான உமாசங்கர் என்பவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பார் உரிமையாளரிடம் மிக குறைந்த விலைக்கு 10,000 மதுபாட்டில்கள் வாங்கியுள்ளார். அங்கிருந்து சித்தூர் மாவட்டத்திற்கு எடுத்து வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ₹10 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு, அவர் கூறினார். இதில், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசாரை டிஎஸ்பி சுதாகர் பாராட்டி பரிசு வழங்கினார்.

Related Stories: