நிர்வாகத்துக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநர் எச்சரிக்கை அரையாண்டு விடுமுறை காலத்தில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தொடக்க மற்றும்  நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வட கிழக்குபருவமழை காரணமாகவும் நவம்பர் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர், நவம்பர் மாதம் இறுதியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் மாதாந்திர தேர்வு மற்றும் திருப்பத் தேர்வுகள் நடத்தப்பட்டது.

இதையடுத்து, ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அறிவிக்கப்படும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டு பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் அரையாண்டு விடுமுறை அறிவிக்கத் தேவையில்லை என்ற முடிவில் பள்ளிக் கல்வித்துறை இருந்தது. ஆனால், சில ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்ததின் பேரில் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன்படி டிசம்பர் 25ம் தேதி முதல் 2022 ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

 

இதையடுத்து அனைத்து வகைப் பள்ளி மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தப் போவதாக தெரிவித்துள்ளன. சில பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளன. அரையாண்டுத் தேர்வு நாட்களில் மாணவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவர்களுக்கு நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதை மீறி வகுப்புகள் நடத்தினால் அந்த பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Related Stories: