பேருந்து ஓட்டுனரை தாக்குவது போன்று தவறான வீடியோவை பரப்பினால் நடவடிக்கை: டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை: கேரளாவில் பேருந்து ஓட்டுனரை தாக்கும் வீடியோவை, தமிழகத்தில் ஓட்டுனர் மீது தாக்குவது போல் தவறான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் பேருந்து ஓட்டுனரை கல்லூரி மாணவர்கள் சிலர் வழிமறித்து கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடையே ஒரு விதமான மன பகமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பேருந்து ஓட்டுனர் தாக்கப்படும் வீடியோவானது, 2018ம் ஆண்டு கேரள மாநிலம் மணக்காடு பகுதியில் நடைபெற்ற சம்பவமாகும். இந்த வீடியோவை தமிழகத்தில் நடைபெற்றது போன்று சித்தரித்து அரசுக்கும், தமிழக காவல் துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதுபோன்ற தவறான செய்தியை வேண்டுமென்று பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Related Stories: