173 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இயேசு கிறிஸ்து சிலை உடைப்பு: அரியானாவில் பதற்றம்

அம்பாலா: அம்பாலாவில் 173 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இயேசு கிறிஸ்து சிலையை உடைத்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியானா மாநிலம் அம்பாலாவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஹோலி ரீடீமர் தேவாலயத்தின் நுழைவாயிலில் இயேசு கிறிஸ்து சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தேவாலய பாதிரியார் பட்ராஸ் முண்டு கூறுகையில், ‘இந்த தேவாலயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 1840ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட 173 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. தேவாலயத்தின் வளாகத்தில் புகுந்த இருவர், சிலையை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். சம்பவ நாளில் நாங்கள் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணியவில் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக தேவாலயத்தை மூடிவிட்டோம்.

இரவு 10.30 மணியளவில் தேவாலய பிரதான வாயில் மூடப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவன் விளக்கை அணைத்துவிட்டு சிலையை உடைத்தான். மற்றொருவன் சிலையை உடைத்த விஷயத்தை மற்றொருவனிடம் போனில் தெரிவித்துக் கொண்டிருந்தான். இவையாவும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. சந்தேக நபரின் முகம் தெளிவாக தெரிகிறது. காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்றார். இச்சம்பவம் தொடர்பாக அம்பாலா கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார், சந்தேக நபர்கள் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அரியானாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: