அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டெஸ்மண்ட் டுட்டு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவரும், உள்நாட்டுப் போரின்போது அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசிற்கு எதிராக 2013-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடந்த காமன்வெல்த் மாநாட்டை உலகத் தலைவர்கள் புறக்கணிக்க வேண்டும் என வெளிப்படையாகத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியவரும், மனித உரிமைச் செயல்பாடுகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Desmond Tutu) அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். நிறவெறி - இனவெறிக்கு எதிராக அவர் நடத்திய அறப்போர், வன்முறையால் சிக்குண்டுத் தவிக்கும் உலகிற்கு வழிகாட்டட்டும் என்றும் முதல்வர் இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளுக்குக் குரல் கொடுத்தும் அடக்கப்பட்டவர்களின் நலனுக்காக தமது மதிப்புமிகு பெயரைப் பயன்படுத்தியும் செயல்திறனாளராக விளங்கினார். எய்ட்சு, காசநோய், தற்பாலினர் வெறுப்பு, திருநங்கை இனத்தினர், வறுமை மற்றும் இனப் பாகுபாடு ஆகியவற்றில் தீவிரப்பணி ஆற்றியுள்ளார் . இஸ்ரேல் நாட்டால் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்கள் பற்றி விசாரிக்க ஐ.நா.வால் அனுப்பப்பட்ட குழுவுக்கு ஒரு யோசனை சொன்னார். நிறத்தால் பாகுபடுத்தும் இந்நாட்டில் இருக்கும் உங்களது முதலீடுகளை திரும்பப் பெறுங்கள். இதனால் இழப்பு எங்களுக்குத்தான். அது ஒரு அற்புதமான நோக்கத்துக்கான இழப்பு என்றார். 1984ஆம் ஆண்டு டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். தொடர்ந்து 1986ஆம் ஆண்டில் மனிதத்திற்கான ஆல்பர்ட் சுவைட்சர் பரிசையும் 1987ஆம் ஆண்டில் பாசெம் இன் டெர்ரிசு பரிசையும் 1999ஆம் ஆண்டு சிட்னி அமைதிப் பரிசையும் 2005ஆம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசையும் பெற்றார். 2009ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் சுதந்திரப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. தனது மேடைப்பேச்சுக்களையும் மேற்கோள்களையும் டுட்டு பல நூல்களாகத் தொகுத்துள்ளார்.

Related Stories: