மியான்மரில் ராணுவம் அட்டூழியம் பெண்கள், சிறுவர் உட்பட 30 பேரை கொன்று எரிப்பு: கை, கால்களை கட்டி, வாகனத்தில் போட்டு தீ

பாங்காக்: மியான்மரில் ஒரு கிராமத்தை சேர்ந்த  30 பேரை கொன்ற ராணுவம், அவர்களின் சடலங்களை வாகனங்களில் போட்டு எரித்து அட்டூழியம் செய்துள்ளது. மியான்மரில்  கடந்த பிப்ரவரியில் புரட்சியின் மூலம் ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக, சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி துப்பாக்கிசசூடு நடத்தி ராணுவம் கொடூரமாக கொன்று குவித்து வருகிறது. இதுவரையில் 1500க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், அப்பாவி மக்களை அது கொன்றுள்ளது.

மேலும், ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்களை கைது செய்து, சிறையில் அடைத்து சித்ரவதை செய்தும் கொன்று வருகிறது.  இந்நிலையில், மியான்மரின் கிழக்கு பகுதியில் உள்ள கயா மாகாணத்தில் மோ சோ என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வந்த மக்களை கடந்த வெள்ளிக்கிழமை இரவு  சுற்றிவளைத்த ராணுவ வீரர்கள், பெண்கள், சிறுவர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றனர். பின்னர், அங்கிருந்த வாகனங்களில் அவர்களின் சடலங்களை தூக்கிப் போட்டு தீ வைத்து எரித்தனர்.

இது குறித்து கரேனி மனித உரிமைகள் குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், ‘மோ சோ கிராமத்தை சேர்ந்த மக்கள் ராணுவத்துக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையிலான சண்டையில்  இருந்து தப்பிக்க, மேற்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமை நோக்கி சென்றனர். அப்போது, அவர்களை ராணுவ வீரர்கள் கைது செய்து அழைத்து சென்றனர். பின்னர், அவர்களின்  கை, கால்களை கட்டி சுட்டுக் கொன்றனர். அவர்களின் சடலங்களை வாகனங்களில் போட்டு,  பெட்ரோலை ஊற்றி எரித்தனர்,’ என கூறியுள்ளனர். வாகனங்களில் சடலங்கள் எரிந்து கொண்டிருக்கும் காட்சி, உலகளவில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மியான்மர் ராணுவத்தின் இந்த கொடூர செயலுக்கு ஐநா போன்ற சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரம், கொல்லப்பட்ட அனைவரும் ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி படைகளை சேர்ந்தவர்கள் என்று, மியான்மரில் வெளியாகும் பத்திரிகைகள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

* மோ சோ கிராமத்தை சேர்ந்த மேலும் பலரை காணவில்லை. அவர்களி்ன் நிலை தெரியவில்லை.

* கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30க்கும் அதிகமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: