நாகர்கோவில் அருகே பரபரப்பு; 13 பவுன் தங்கநகை, ரூ2 லட்சத்தை ஏமாந்த இளம்பெண் தற்கொலை முயற்சி: அமமுக நிர்வாகி மீது பகீர் புகார்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். தன்னிடம் 13 பவுன் நகை, ரூ. 2 லட்சத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக அமமுக நிர்வாகி மீது புகார் அளித்துள்ளார். நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று திடீரென விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், அமமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர், தங்களது குடும்பத்துடன் பழகி 13 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், தற்போது பணம், நகையை தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறி உள்ளார். மேலும் எந்தெந்த தேதிகளில் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான டைரி குறிப்பும் அவர் எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடிதம் ஒன்றையும் காவல்துறையினருக்கு எழுதி உள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக, சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவமனையில் உள்ளார். அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனைக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பணம், நகைகள் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கேட்டுள்ளனர். எந்த காரணத்துக்காக பணம், நகை கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமமுக நிர்வாகியிடமும் விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் தொடர்பான விபரங்கள் தெரிய வரும் என்று போலீசார் கூறி உள்ளனர். அமமுக நிர்வாகி மீது இளம்பெண் கூறி உள்ள பணம், நகை மோசடி புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: