குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நிறுத்தப்படுமா? நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

குழித்துறை:கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவனந்தபுரம் மார்க்கமாக புனலூர் - மதுரை பயணிகள் ரயில், மெமூ பயணிகள் ரயில், அனந்தபுரி ரயில், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் என தினசரி ரயில்களும் இயக்கபட்டு வருகின்றன. இந்த தடத்தில் குழித்துறை மேற்கு ரயில்நிலையம் தமிழக கேரள எல்லையில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் கழுவன் திட்டை பகுதியில் அமைந்துள்ளது. மேல்புறம், அருமனை, பனிச்சமூடு, ஆறுகாணி உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ேசர்ந்த கூலி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள், மருத்துவத்திற்க்காக செல்கின்ற மக்கள் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு செல்வதற்கு குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இரு மாநில ரயில், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் இரு மாநில ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து  மீண்டும் துவங்கி உள்ளது. இந்நிலையில் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் நிறுத்தபட்டு வந்த தினசரி பயணிகள் ரயில் தற்போது நிறுத்தப்படாததால் ரயில் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக அதிகாலையில் கேரள மாநிலம் செல்லும் பயணிகள் மார்த்தாண்டத்தில் அமைந்துள்ள குழித்துறை ரயில் நிலையம் அல்லது பாறசாலை ரயில் நிலையம் செல்ல வேண்டியுள்ளது.

அதிகாலை நேரம் போக்குவரத்து குறைவாக உள்ள நிலையில் ரயில் நிலையம் செல்வதற்கு சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே எளிதாக அனைத்து பயணிகள் வந்து செல்வதற்கு குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் ரயில் நிற்காததால் ரயில் டிக்கெட் கவுன்டர் மூடப்பட்டுள்ளது பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சேடி காணப்படுவதால் ரயில் நிலைய வளாகத்தில் புதர்செடிகள் வளர்ந்துள்ளது. மேலும் நாடோடி மக்கள் தங்கள் துணிகளை உலர்த்தும் நிலையமாக மாறியுள்ளது குழித்துறை மேற்கு ரயில் நிலையம். இரவு நேரம் மின் விளக்குகள் இல்லாததால் சமூக விரோதிகளின் புகலிடமாகவும் குழித்துறை மேற்கு ரயில்நிலையம் மாறி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: