ரங்கூன் சிறையில் வாடிய ஐஎன்ஏ தியாகியின் மகளுக்கு பென்ஷன்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருச்சியை சேர்ந்த  மாரியம்மாள் (எ) தெய்வநாயகி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என்  தந்தை காளியப்பன். பர்மாவில் வசித்தார். அப்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து நாட்டின் விடுதலைக்காக போராடினார். பர்மாவிலுள்ள ரங்கூன் நகரில் செயல்பட்ட இந்திய விடுதலை லீக் அமைப்பில் இணைந்து போராடியுள்ளார். 25.5.1945ல்  கைதானார். தொடர்ந்து 1945 டிசம்பர் வரை ரங்கூன் மத்திய சிறையில்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இவர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான பென்ஷன் கேட்டு கடந்த 8.8.1999ல் ஒன்றிய அரசுக்கு விண்ணப்பித்திருந்தார்.

கடந்த 16.2.2000ல் என் தந்தையும், 6.1.2001ல் என் தாயும் இறந்தனர். இதனால், என் தந்தைக்குரிய தியாகி பென்ஷனை அவரது ஒரே வாரிசான எனக்கு வழங்க கோரியிருந்தேன். எனது தந்தையின் விண்ணப்பம் தமிழக அரசின் பரிந்துரைக்காக அனுப்பப்பட்டிருந்தது. கலெக்டரின் பரிந்துரையின்பேரில் திருவெறும்பூர் தாசில்தார் நேரில் ஆய்வு செய்து, எனக்கு தியாகி பென்ஷன் வழங்கலாம் என அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். ஆனால், எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. எனவே, தியாகிகளின் வாரிசுகளுக்கான குடும்ப பென்ஷனை எனக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவு: இது ஒரு துரதிஷ்டவசமான வழக்கு. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஐஎன்ஏ  சான்றிதழும் இணைத்துள்ளார். இதுபோன்ற பென்ஷனுக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டுமென விதி உள்ளது. ஒன்றிய அரசின் செயலர், விண்ணப்பத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய அப்படியே திருச்சி கலெக்டருக்கு அனுப்பியுள்ளார். ஏற்கனவே திருவெறும்பூர் தாசில்தார் ஆய்வு செய்து, பரிந்துரைத்துள்ள  நிலையில், உண்மைத்தன்மையை ஆய்வு செய்வது வேதனைக்குரியது. எனவே, மனுதாரர் போதுமான ஆவணங்களுடன் திருச்சி கலெக்டரிடம் ஜன.10க்கு முன்னதாக விண்ணப்பம் வழங்க வேண்டும்.

இதன்பிறகு மனுதாரரை நேரில் ஆஜராக வைத்து ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து, பிப்.10க்கு முன்னதாக கலெக்டர் விசாரித்து முடிவெடுக்க வேண்டும். இதைத்தொடர்ந்து தனது பரிந்துரையை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி, தமிழ்நாடு அரசு மூலம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இதன்பேரில் ஒன்றிய அரசின் தியாகிகள் பென்ஷன் பிரிவு செயலர் 4 வாரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மனுதாரரின் தந்தை நாட்டிற்காக ஆற்றிய பணிகள், தியாகம் மற்றும் ரங்கூன் சிறையில் வாடியதை மனதில் வைத்து பென்ஷன் வழங்க பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.      

Related Stories: