உலகம் உருவான ரகசியத்தை கண்டறிய வரலாற்று முயற்சி உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது நாசா: பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ உயரத்தில் நோட்டமிடும்

வாஷிங்டன்: பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சமும், உயிரினங்களும் உருவானதன் ரகசியத்தை கண்டறியக் கூடிய, உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் வெற்றிகரமாக ஏவி நாசா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து, ‘ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்’ எனும் உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கி உள்ளது. இதை உருவாக்கும் பணி கடந்த 1996ம் ஆண்டு தொடங்கியது. 2007ல் முடிக்க திட்டமிட்ட இப்பணி பல்வேறு காரணங்களால் தள்ளிப் போனது. பின்னர், பல்வேறு கடின முயற்சிகளுக்குப்பின், ரூ.75,000 கோடி மதிப்பில் பிரமாண்டமான இந்த தொலைநோக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

இதை விண்ணில் ஏவும் நிகழ்வு நேற்று நடந்தது. பிரான்சின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு விண்வெளி மையத்தில் இருந்து, ‘ஏரியன் 5 ராக்கெட்’ மூலம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இந்திய நேரப்படி நேற்று மாலை விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட அடுத்த அரை மணி நேரத்தில் தனது விண்வெளியை அடைந்தது. அங்கிருந்து அது தனது ஆன்டனா மூலமாக வெற்றிகரமாக சிக்னல் அனுப்பிக் கொண்டே, சூரியனின் சுற்றுப்வட்டப் பாதையை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.

இதன் மூலம், நாசா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பிரபஞ்சத்தில் 14 ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது, இந்த உலகமும், உயிரினங்களும் எப்படி உருவாகின என்பன போன்ற ரகசியங்களை தேடுவதற்காக, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி ஏவப்பட்டிருக்கிறது. இந்த பிரமாண்ட தொலைநோக்கி தனது மேம்பட்ட திறன்களை பயன்படுத்தி சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை இன்னும் தெளிவாக ஆய்வு செய்யும் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். இதன் மூலம், வேற்று கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்றும் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் சூரிய குடும்பத்திற்கு அப்பாற்பட்ட கிரகங்கள் மற்றும் பிரபஞ்சம் உருவானதன் பல்வேறு ரகசியங்களுக்கு விடை கிடைக்கும்.

* டென்னிஸ் மைதானம் அளவில் தொலைநோக்கி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் தனது இருப்பிடத்தை அடைய அடுத்த ஒரு மாதத்திற்கு பயணம் மேற்கொள்ளும். இது சந்திரனை விட 4 மடங்கு தூரத்தில், பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொள்ளும். அதற்கு முன், அடுத்த 2 வாரத்தில் தொலைநோக்கி அதன் 6.5 மீட்டர் விட்டம் கொண்ட, அதாவது ஒரு டென்னிஸ் மைதானம் அளவுக்கு பெரிதான தங்க முலாம் பூசப்பட்ட முதன்மை கண்ணாடி மற்றும் சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் துணைக் கண்ணாடியை விரித்துக் கொள்ளும். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பல்வேறு கட்டங்களை தாண்டி ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றி பெற வேண்டி உள்ளது.

* ஹப்பிளை விட 100 மடங்கு துல்லியமானது

கடந்த 1990ம் ஆண்டில் உலகின் ரகசியத்தை அறியவதற்காக அனுப்பப்பட்ட ‘ஹப்பிள்’ எனும் விண்வெளி தொலைநோக்கியை நாசா முதன் முதலில் ஏவியது. பூமியில் இருந்து 600 கிமீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இது, 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வருகிறது. ஆனால், இதில் ஏற்பட்ட சில கோளாறுகளால் ஹப்பிள் சேகரித்த படங்கள் தெளிவாக இல்லை. இப்போது ஏவப்பட்டிருக்கும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, இதை விட பலமடங்கு மேம்பட்டது. இதிலிருக்கும் ராட்சத தங்க முலாம் பூசப்பட்ட கண்ணாடி மற்றும் அகச்சிவப்பு ஒளி கண்காணிப்பு கருவிகள் ஹப்பிள் பார்ப்பதை விட 10 முதல் 100 மடங்கு தெளிவாக பார்க்க முடியும் என்கிறது நாசா.

Related Stories: