அலகாபாத் நீதிமன்றம் வலியுறுத்தல் உபி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா?..தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் முடிவு

பிரயாக்ராஜ்: ஒமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை ஒத்தி வைக்க வேண்டுமென அலகாபாத் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அரசியல் கட்சிகளும் இப்போதே பிரமாண்ட பேரணிகளை நடத்தி பிரசாரத்தை தொடங்கி உள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது ஏராளமான வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்தனர். இதைப் பார்த்து, வழக்கை விசாரித்த நீதிபதி ஷேகர் யாதவ் கூறியதாவது:

தனிநபர் இடைவெளியை எல்லா இடத்திலும் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால், ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாகி விடும். கொரோனா 2ம் அலையின் போது நடந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலால் வைரஸ் தொற்று வேகமாக பரவி ஏராளமானோர் பலியாகினர். எனவே, தற்போது தேர்தல் பேரணிகள் நடப்பதை நாம் நிறுத்தாவிட்டால், நிலைமை 2ம் அலையை விட மோசமாகலாம். பேரணி, தேர்தல் கூட்டங்களை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி, பத்திரிகை, டிவிக்கள் மூலமாக பிரசாரம் செய்யும்படி கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.  

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மோடியும், தேர்தல் ஆணையமும் உரிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் சுஷில் சந்திரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘அடுத்த வாரம் உபிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளோம். அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.

4 மாநிலங்களில் இரவு ஊரடங்கு

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல், மத்திய பிரதேசத்திலும் நேற்று முன்தினம் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உட்பட 8 மாவட்டங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும்  இன்று முதல் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: