திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு தீப மை வினியோகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த மாதம் 19ம்தேதி மகா தீப பெருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் மலையில் மகா தீபம் காட்சியளித்தது. மகா தீப கொப்பரை மலையில் இருந்து கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, பூஜை செய்து ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. கடந்த 20ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது, சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட மகா தீப மை அணிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தீப மை பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவதற்கான பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. மகாதீப மை மற்றும் விபூதி குங்குமம் அடங்கிய பிரசாத பொட்டலங்களை பேக்கிங் செய்யும் பணி கோயிலில் நடந்து வருகிறது. இந்நிலையில், மகா தீப மை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள கிளிகோபுரம் நுழைவு வாயிலில் சிறப்பு பிரிவு ெதாடங்கப்பட்டுள்ளது. தீப மை பிரசாதம் 10 ரூபாய்க்கு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதனை, பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மேலும், மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள், அதற்கான ரசீதை காண்பித்து, கோயிலில் தீப மை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: