விவசாயிகள் போராட்ட சர்ச்சை கருத்து: போலீசிடம் கங்கனா வாக்குமூலம்

மும்பை:  விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கங்கனா, தற்போது போலீசிடம் தனது கருத்து குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை காலிஸ்தானி இயக்கம் என்று, பாலிவுட் நடிகை கங்கனா விமர்சித்து இருந்தார். இவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவர் மீது மகாராஷ்டிரா மாநிலம் கர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி கங்கனா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே போலீசார் அனுப்பிய சம்மனுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று காலை 11 மணிக்கு கர் காவல் நிலைய போலீசார் முன் கங்கனா ஆஜரானார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘நடிகை கங்கனா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தானி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார். அதனால் சீக்கிய அமைப்பின் உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது ஐபிசி 295-ஏ-ன் கீழ் வழக்கு பதியப்பட்டது. தற்போது காவல் நிலையத்தில் ஆஜரான கங்கனாவிடம் ஒரு மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. அனைத்து வாக்குமூலமும் முறையாக பதிவு செய்யப்பட்டது’ என்றார்.

Related Stories: