முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா, முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தமிழக ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும். அதற்காக ஆணைய அறிக்கை ஆளுநருக்கு அனுப்பப்படவுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: