குறளோவியம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி: அமைச்சர் த.மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

சென்னை: குறளோவியம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி: தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். குறளோவியப் போட்டி உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், இலக்கணம், இலக்கியம் முதலானவற்றையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும், அறிஞர் பெருமக்களைத் தம்பால் ஈர்த்த பெருமைக்குரியதும், எக்காலத்திற்கும் பொருந்தும்படியான அறவாழ்வியல் கருத்துகளைக் கொண்ட உலகப் பொதுமறையான திருக்குறளில் குறளோவியம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இணைய வழியிலான இப்போட்டியினை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் இன்று (22.12.2021) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. மகேசன் காசிராஜன் இ.ஆ.ப., தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், தமிழ்நாட்டில் பயிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து வகையான கல்லூரி மாணவர்களும் www.kuraloviyam.com என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான குறட்பாக்களில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்து, அக்குறட்பாக்களின் பொருளை மையமாகக் கொண்டு தெளிவாக வண்ண ஓவியம் வரைந்து www.kuraloviyam.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தபாலிலும் அனுப்ப வேண்டும்.

மேலும், வண்ண ஓவியத்தின் அசலை (Original) மடிக்காமலும், அதனைச் சேதப்படுத்தாமல் தனியாகவும், சுய விவரக் குறிப்பு மற்றும் தேர்வு செய்த அதிகாரம் மற்றும் குறளைத் தனித் தாளிலும் எழுதி, ஒரே உறையில் வைத்து பாதுகாப்பான முறையில் அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை - 25. என்ற முகவரிக்கு உறையின் மேல் குறளோவியம் ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு 31-12-2021 க்குள் அஞ்சல் அல்லது தூதஞ்சல் (Courier) மூலம் அனுப்பி வைக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் இப்போட்டியில் சிறந்த வண்ண ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி, கல்லூரி என இரண்டு பிரிவாக பரிசுத் தொகைகள் வழங்கப்படும்.

முதல் பரிசாக ரூ.50,000/-, இரண்டாம் பரிசாக - ரூ.30,000/-, மூன்றாம் பரிசாக - ரூ.20,000/-, வழங்கப்படும். மேலும், சிறப்புப் பரிசாக தலா ரூ.5,000/- 20 நபர்களுக்கு வழங்கப்படும். சிறப்புற வரையப்படும் 365 வண்ண ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்வோவியங்கள் நாட்காட்டியாக அச்சிடப்படவுள்ளன. நாட்காட்டியில் அச்சிடப்பட தேர்வு செய்யப்படும் ஓவியங்களுக்குச் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசாக ரூ. 1,000/- வழங்கப்படும். இவ்வோவியப் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ மாணவிகள் www.kuraloviyam.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்போட்டிக்கான விதிமுறைகள் மேற்காணும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நடுவர் குழுவின் முடிவு இறுதியானது.

Related Stories: