ஊட்டியில் 2ம் நாளாக கடும் உறைபனி கொட்டியது-குளிரால் மக்கள், சுற்றுலா பயணிகள் அவதி

ஊட்டி : ஊட்டியில் 2ம் நாளாக நேற்றும் உறைப்பனி கொட்டிய நிலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் வரை பனி பொழிவு காணப்படும். அக்டோபர் மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து, உறை பனி விழும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

இது போன்ற சமயங்களில் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்யசிற்கு செல்லும். அப்போது நீர் நிலைகள், புல்வெளிகள் மற்றும் வனங்களில் பனிக்கட்டிகள் கொட்டிக் கிடக்கும். ஆனால், இம்முறை உறைபனி கடந்த வாரம் வரை விழவில்லை. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவுகிறது. தற்போது நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் உறைபனி விழத்துவங்கியுள்ளது.

நேற்று முன்தினம் உறைபனி விழுந்த நிலையில், நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறைப்பனி கொட்டியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்.பி.எப்., போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் உறைபனி அதிகமாக காணப்பட்டது.

உறைபனி விழத்துவங்கியுள்ளதால், தற்போது அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. பனி பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Stories: