லட்சத்தீவில் பள்ளி, கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து: மக்கள் கடும் எதிர்ப்பு

லட்சத்தீவு: லட்சத்தீவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையில் அளிக்கப்பட்டு இருந்த விடுமுறை திடீரென ரத்து செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவின் ஒன்றிய அரசு பிரதிநிதியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்ட பிறகு, அங்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டு, மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். மேலும், நீதிமன்ற எல்லை வரையறைகளையும் மாற்ற முயன்றார். அவருடைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி, அவரை மாற்றும்படி கேரள அரசு தனது சட்டப்பேரவையில் தீர்மானம் கூட நிறைவேற்றியது.

சமீப காலமாக இவருடைய நடவடிக்கை ஒடுங்கி இருந்த நிலையில், தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைக்கு திடீரென மாற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவில் முஸ்லிம்கள் அதிகளவில் வசிப்பதால், அங்கு பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதை திடீரென ரத்து செய்துள்ள லட்சத்தீவு கல்வித் துறை, அன்றைய தினம் கல்வி நிலையங்கள் செயல்பட உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதிலாக  ஞாயிற்றுக் கிழமையை விடுமுறையாக அறிவித்து, அதற்கான நாட்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு லட்சத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவை திரும்பப் பெறும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: