ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்றும், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தங்களது தரப்பு அளிக்கும் என்றும் அப்போலோ மருத்துவமனை உறுதியளித்துள்ளது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் 2017ம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தொடக்கத்திலிருந்தே, அப்ேபாலோ மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் விசாரணைக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.

கடந்த 2018 ஜனவரியில், மருத்துவமனை ஆணையத்தில் 6 ஆயிரம் பக்கங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2016 செப்டம்பர் 22ம் தேதி முதல் 2016 டிசம்பர் 5ம் தேதி   வரை அதாவது, அவர் மரணம் அடையும் வரை மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு அளித்த  சிகிச்சை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆணையத்திடம் அளித்துள்ளோம். இன்றுவரை 56 அப்போலோ மருத்துவர்கள், அப்போலோ மருத்துவமனையின் 22 துணை மருத்துவ மற்றும் துணை ஊழியர்கள் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த விவகாரம் முழுக்க, முழுக்க மருத்துவ நுட்பம் சார்ந்தது என்பதால், ஆணையத்துக்கு உதவுவதற்காக மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

ஆனால், அதனை ஆணையம் ஏற்கவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் முறையிட்டபோது அந்த மனு ஏற்கப்படவில்லை. அதை தொடர்ந்தே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தற்போது மருத்துவ வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அப்போலோ மருத்துவமனை முழு ஒத்துழைப்பு எப்போதும் வழங்கி வருகிறது. அது இனிமேலும் தொடரும். ஆணையத்தை கலைக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: