மன்னார்குடியில் இருந்து பரவாக்கோட்டை வழியாக மதுக்கூர் வரை மகளிருக்கான இலவச டவுன் பஸ் இயக்க வேண்டும்-இந்திய கம்யூ. கிளை மாநாட்டில் வலியுறுத்தல்

மன்னார்குடி : மன்னார்குடியில் இருந்து பரவாக்கோட்டை வழியாக மதுக்கூர் வரை மகளிருக்கான இலவச நகரப் பேருந்தை இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பரவாக்கோட்டை கிளையின் 27 வது மாநாடு காளிமுத்து மல்லிகா தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் திரவியம் ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபியை பிச்சையன் திறந்து வைத்தார். கிளை செயலாளராக ராமலிங்கமும், துணை செயலாளர்களாக சண்முகவேலன் தனபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட குழு உறுப்பினர்கள் மாரியப்பன், மகேந்திரன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் அமிர்தஜெயம், ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பீர்மானந்தம் ஆகியோர் பேசினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மாலா பாண்டியன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.

மாநாட்டில், பரவாக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு தேவையான இடங்களை கையகப்படுத்தி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்கி 24 மணி நேர மருத்துவமனையாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி முழுவதும் கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும். மன்னார்குடியில் இருந்து பரவாக்கோட்டை வழியாக மதுக்கூர் வரை மகளிருக்கான இலவச நகரப் பேருந்தை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: