தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை தூதரை அழைத்து எச்சரிக்காதது ஏன்? ஒன்றிய அரசுக்கு வைகோ கேள்வி

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கை தூதரை அழைத்து ஒன்றிய பாஜ அரசு எச்சரிக்காதது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மீனவர்கள் 55 பேரை, நேற்று இலங்கை கடற்படை கைது செய்து இருக்கிறது. அவர்களுடைய 6 படகுகளைப் பறிமுதல் செய்துள்ளனர். 1980களில் தொடங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்று விட்டது. அன்று முதல் இன்று வரையிலும், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத் தொடரிலும், இதுகுறித்து நான் பேசி வருகிறேன். கேள்விகள் கேட்டு வருகிறேன்.

குஜராத் மீனவர் ஒருவரை, பாகிஸ்தான் கடற்படை தாக்கியது என்றவுடன், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை, அயல் உறவுத்துறை அமைச்சகத்துக்கு வரவழைத்து, கண்டனத்தைப் பதிவு செய்கிற பாஜ அரசு, தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற இலங்கை தூதரை அழைத்து எச்சரிக்கை செய்யாதது ஏன்? மோடி தலைமையிலான பாஜ அரசு, தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவில்லை. தீர்வு எதுவும் இல்லை. இந்திய கடற்படை தன் கடமையைச் செய்யவில்லை. நேற்று இலங்கை கடற்படை சிறைபிடித்த 55 மீனவர்களை இன்றைக்கே விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இலங்கை அரசுடன் தூதரக உறவுகளை இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கு, பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்குத் தொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: