அதிகரிக்கும் கொரோனா: டெல்லிவாசிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி தேவை..ஒன்றிய அரசுக்கு முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை..!!

டெல்லி: டெல்லியில் பொதுமக்கள் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக திடீரென அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் தொற்றால் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் டெல்லியில் உயர்ந்துள்ளது.  இதனால், மூன்றாவது அலை ஏற்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தங்கள் மாநிலத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் இனி புதிதாக பதிவாகும் அனைத்து கொரோனா தொற்றுகளும் ஒமிக்ரான் வகையை சேர்ந்ததா என ஆய்வு செய்யப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார். ஒமிக்ரான் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஒமிக்ரான் பரவினால் அதை எதிர்கொள்ள  தயாராக இருப்பதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: