சீனாவின் சட்ட திருத்தத்திற்கு பிறகு ஹாங்காங் பொதுத்தேர்தல் வாக்கு சதவீதம் படுமந்தம்

ஹாங்காங்: சீனாவின் சர்ச்சைக்குரிய சட்ட திருத்தத்திற்குப் பிறகு ஹாங்காங்கில் முதல் முறையாக பொதுத்தேர்தல் நடந்தது. முழுக்க முழுக்க சீன ஆதரவு வேட்பாளர்கள் மட்டுமே களமிறக்கப்பட்டதால், பொதுமக்கள் வாக்களிக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங், தற்போது சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. ஹாங்காங்கின் நிர்வாக பொறுப்பில் சீனாவின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. இதை எதிர்த்து போராட்டங்கள் வலுத்ததால், ஹாங்காங்கில் தனது பிடியை வலுவாக்க சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து, ஹாங்காங்கின் தேர்தல் நடைமுறையிலும் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. இதன்படி, ஹாங்காங்கில் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டது.

சீன சட்டத் திருத்தத்தின்படி, ஹாங்காங் சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 70ல் இருந்து 90 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2016ல் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் எண்ணிக்கை 35 ஆக இருந்தது. இது, தற்போது 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 40 பேரை சீனாவின் ஆதரவு பெற்ற தேர்தல் குழு நியமிக்கும். 30 பேர் வணிக மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் குழு நியமிக்கும். இவர்களும் சீன ஆதரவாளர்களாகவே இருப்பார்கள்.

இந்த சட்ட திருத்தத்திற்குப் பின் முதல் முறையாக ஹாங்காங்கில் பொதுத் தேர்தல் நேற்று நடந்தது. அமைதியாக தேர்தலை நடத்த பாதுாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பங்கேற்கவில்லை. தேர்தலில் சீன ஆதரவு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர். இதனால், வாக்களிக்க மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. 44 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். ஆனால் வாக்குப்பதிவு தொடங்கி 7 மணி நேரத்தில் 18 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.

Related Stories: