ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் காலிறுதியில் தமிழகம் - கர்நாடகா அணிகள் நாளை மோதுகின்றன. கடந்த 8ம் தேதி தொடங்கி நடந்து வரும் இந்த தொடரின் லீக் சுற்று முடிவில், எலைட் பி பிரிவில் முதலிடம் பிடித்த தமிழகம் உள்பட மொத்தம் 5 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின. மற்ற 3 அணிகளை முடிவு செய்வதற்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. அதில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது. டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பந்துவீச, ராஜஸ்தான் 41.4 ஓவரில் 199 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் தீபக் ஹூடா 109 ரன் (109 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்), சமர்பித் ஜோஷி 33, ரவி பிஷ்னோய் 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய கர்நாடகா 43.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 204 ரன் எடுத்து அபாரமாக வென்றது. அந்த அணியின் கேப்டன் ரவிகுமார் சமர்த் 54, தேவ்தத் படிக்கல் 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சித்தார்த் 85 ரன் (120 பந்து, 6 பவுண்டரி), மணிஷ் பாண்டே 52 ரன்னுடன் (53 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மற்ற ஆட்டங்களில் உத்தர பிரதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியையும், விதர்பா அணி 34 ரன் வித்தியாசத்தில் திரிபுரா அணியையும் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றன. நாளை நடைபெறும் முதல் காலிறுதியில் இமாச்சல் - உத்தர பிரதேசம், 2வது காலிறுதியில் தமிழகம் - கர்நாடகா மோதுகின்றன. 22ம் தேதி நடக்கும் 3வது காலிறுதியில் சவுராஷ்டிரா - விதர்பா, 4வது காலிறுதியில் கேரளா - சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.