நபார்டு வங்கியின் நிதியுதவி பெற்று நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 அணைகள் சுற்றுலா தலமாகிறது: தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: நபார்டு வங்கியின் நிதியுதவியை பெற்று நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 அணைகளை சுற்றுலாதலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக அரசின் ஒப்புதல் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 90 அணைகள் உள்ளன. இதில், மேட்டூர், பவானிசாகர், அமராவதி, முல்லை பெரியாறு, சோலையாறு, சாத்தனூர், கிருஷ்ணகிரி, பாபநாசம், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பரம்பிகுளம், ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 15 முக்கிய அணைகள் அடக்கம். இந்த அணைகள் தான் குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த அணைகளின் நீர் இருப்பை பார்க்க பொதுமக்கள் செல்வது வழக்கம்.குறிப்பாக, சாத்தனூர், பவானிசாகர் உட்பட முக்கிய அணைகளுக்கு வழக்கமாக தினமும் 2 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். ஆனால், இந்த அணைகளில் எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படாததால் அணைகளை மட்டுமே சுற்றி பார்த்து விட்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, அணைகளுக்கு வரும் மக்களை கவரும் வகையில் மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளை சுற்றுலாதலமாக்கும் வகையில், கட்டமைப்புகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அணைகள் பாதுகாப்பு இயக்கம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் அணைகளை நேரில் ஆய்வு செய்தனர். இதில், முதற்கட்டமாக சாத்தனூர், பவானிசாகர், வெலிங்கடன், சோத்துப்பாறை, மணிமுக்தா உட்பட 12 அணைகளுக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் பேரில், அணைகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி, பூங்கா, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அணைகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளை நபார்டு வங்கியின் நிதியுதவி மூலம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 7 அணைகளில் சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. ஆனால், தற்போது 5 அணைகளில் மட்டுமே சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு கோரி தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் டெண்டர் விடப்படும்.

Related Stories: