கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: நிர்வாக மேலாண்மை இயக்குனர் நடவடிக்கை

சென்னை: நாடு முழுவதும் கோஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு 175 விற்பனை நிலையம், 8 ஒப்பந்த விற்பனை நிலையம், 18 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இதில், நிரந்தரம் மற்றும் தற்காலிக அடிப்படையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் விற்பனை இரவு 9 மணி வரை பணி நேரம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பெண் ஊழியர்கள் வீட்டிற்கு செல்ல தாமதமாகும் என்பதால் இந்த நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக மேலாண்மை இயக்குனர் அனைத்து மண்டல இயக்குனர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள 40 விற்பனை நிலையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளில் செயல்படும் விற்பனை நிலையங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் செயல்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: