குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை இடிக்கும் பணி: கலெக்டர் ஆய்வு

குளித்தலை: நெல்லையில் தனியார் பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தின் எதிரொலியாக கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மோசமான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக இடிக்கும் பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லையில் தனியார் பள்ளி கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்து 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை உடனடியாக இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்பணி துவங்கியதை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கலெக்டர் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி மதுவிலக்கு தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி கரூர் மாவட்டத்தில் இருக்கும் 1072 தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளது. இதில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் இன்று (நேற்று) மட்டும் 20 கட்டிடங்கள் இடிக்கும் பணி உடனடியாக நடைபெற்று வருகிறது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை பொது பணி கட்டிட பிரிவு துறை அவரவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அவர்களிடம் கட்டிட உறுதித்தன்மை குறித்து கடிதம் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பள்ளிகளில் கட்டிடங்கள் உறுதித்தன்மைய ஆய்வு செய்து அதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் அதிகாரிகள் மெத்தனப்போக்கு காட்டாமல் செயல்பட வேண்டுமென கூறினார். அப்போது கோட்டாட்சியர் புஷ்பாதேவி, வட்டாட்சியர் விஜயா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளி தலைமையாசிரியை மஞ்சுளா, பொதுப்பணி கட்டிட பிரிவு அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: