பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை திமுகவின் ஒவ்வொரு கிளையிலும் கொண்டாட வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொள்கை சூரியனாய் ஒளி வீசும் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை திமுகவின் ஒவ்வொரு கிளையிலும் கொண்டாட வேண்டுமென கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார். திமுகவினருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் அண்ணா, கலைஞர் போன்று பேராசிரியர் என்றாலே நினைவுக்கு வருபவர் க.அன்பழகன் தான் என குறிப்பிட்டுள்ளார். அவருடைய நூற்றாண்டு தொடக்க விழா நாளை என்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். எளிமையும், உறுதியுமே அவரது அடையாளங்கள் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரிடம் தொண்டனாக சேர்ந்து அண்ணாவிடம் பயிற்சி பெற்ற தன் உருவமும், உணர்வும் மாறவில்லை என்று குறிப்பிட்டு அதன்படி அன்பழகன் வாழ்ந்ததாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். கலைஞர் அரைநூற்றாண்டு தலைவராக இருந்தது போலவே ஏறத்தாழ அதே கால அளவிற்கு பொதுச்செயலாளராக இருந்தவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். பொதுவுடைமை இயக்கத்தில் கார்ல் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நட்பைப் போல திராவிட இயக்கத்தில் கலைஞர், பேராசிரியர் நட்பு கொள்கை உறவுக்கான எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக மற்றும் அமைச்சராக ஆற்றிய பணிகள் அனைத்திலும் துணிவும், தெளிவும் வெளிப்பட்டன என்றும் ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியபோது தானும் பதவி விலகியர் அன்பழகன் என்றும் தெரிவித்துள்ளார். தமிழர் திருமணமும், இவர்தாம் பெரியார், மாமனிதர் அண்ணா, கழகமும் கலைஞரும் உள்ளிட்ட 40க்கும் அதிகமான நூல்களை அன்பழகன் எழுதியுள்ளதையும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கை சூரியனாய் என்றும் ஒளி வீசும் பேராசிரியரின் நூற்றாண்டை ஒவ்வொரு கிளை வரையிலும் கொண்டாட வேண்டும் என்றும் முதலமைச்சர் திமுகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: