மத்திய அரசு திட்டப்பணிகளை தமிழகத்தில் செயல்படுத்த அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது ; அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: மத்திய அரசு திட்டப்பணிகளை தமிழகத்தில் செயல்படுத்த  அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் இன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உடனான காணொளி வாயிலாக கலந்தாய்வு நடைபெற்றது. இன்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் உடனான காணொளி வாயிலாக கலந்தாய்வு கூட்டம் சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை மேம்பாட்டு பணிகள் தொடர்பாக நீர்வள ஆதாரத்துறை, வனத்துறை, மின்சாரத்துறை மற்றும் வருவாய்த்துறைகளுக்கு இடையே சாலை மேம்பாட்டு பணிகளில் ஏற்படும் இடர்பாடுகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை - பெங்களுர் விரைவுச்சாலை மதிப்பீடு ரூ.4,300 கோடி, மாமல்லபுரம் - புதுச்சேரி சாலை ரூ.3,228 கோடி மற்றும் விக்ரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை ரூ.4,314 கோடி ஆகிய சாலைகள் குறித்தும் மற்றும் அனைத்து திட்டப்பணிகளில் முன்னேற்றம் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நில எடுப்பு பணிகள், மின் கம்பம் மற்றும் மின் மாற்றிகள் மாற்றி அமைக்கும் பணிகள், வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணி, சாலை அமைக்க தேவைப்படும் மண் ஆகியவை குறித்து மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசித்து மாநிலத்தில் விரைந்து சாலைப்பணிகள் நடைபெற வேண்டி அறிவுரை வழங்கினார்கள்.

மேலும் அமைச்சர் கூறுகையில் மத்திய அரசு திட்டப்பணிகளை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. இந்தப் பணிகளை செயல்படுத்துவதில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்களது முழு கவனத்தையும் செலுத்தி தமிழக மக்கள் பயண்பாட்டிற்கு பணிகளை விரைவாக முடித்திட அறிவுறுத்தினார். மேலும், திண்டிவனம் - திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலை நீண்டகாலமாக மேம்பாடு செய்யாமல் இருந்தது குறித்து 2016-ஆம் ஆண்டு தாம் இந்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் அதற்கு மாண்புமிகு மத்திய அமைச்சர் அப்போதைய தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்கவில்லை என தெரிவித்தார். தற்போது, ஒன்றிய அரசுப்பணிகளுக்கு இந்த அரசு அனைத்து விதமான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பொதுப்பணித்துறை ,நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், தமிழக நெடுஞ்சாலைத்துறையின் அரசு முதன்மைச் செயலர் திரு.தீரஜ்குமார்,இ.ஆ.ப. அவர்கள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைமைப் பொது மேலாளர்(புதுதில்லி) திரு.கொடாஸ்கர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலர்கள் மற்றும் திட்ட இயக்குநர்கள் தலைமைப் பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலை) திரு.ந.பாலமுருகன் அவர்கள், வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர், மின்சாரத்துறை மேலாண்மை இயக்குநர், நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்புப் பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: