மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் பேராம்பூர் பெரியகுளம் அபாயம் நீங்கியது: பொதுமக்கள், விவசாயிகள் நிம்மதி

விராலிமலை: தமிழக அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் பேராம்பூர் பெரியகுளம் மதகு அணையில் இருந்து நீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.விராலிமலை அருகே பேராம்பூர் பெரியகுளம் 3 கிலோ மீட்டர் நீளம் 15 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அப்பகுதியில் பெரியகுளமாகும். இக்குளத்தில் இருந்து விவசாயத்திற்காக கடந்த 1933ம் ஆண்டு வோர்ட்ஸ்வொர்த் என்ற ஆங்கிலேயரால் 6 கண் கொண்ட மதகு அணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கடந்த 10 ஆண்டுகளாக சேதமடையும் நிலையில் இருந்தது. இதனை தொடர்ந்து அப்போதைய அதிமுக ஆட்சியில் புதிய அணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதை கண்டுகொள்ளாத அதிமுக அரசால் அணை மிகவும் சேதமடைந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் குளம் நிரம்பி வழிந்தது. இதனால் ஏற்கனவே சேதமடைந்திருந்தது அணையின் சிமெண்ட் காரைகள் கடந்த 10ம் தேதி பெயர்ந்து விழத் தொடங்கியது. இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அணையை பார்வையிட்டு புதிய அணை கட்டுவதற்கு ரூ.2.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள தகவலை தெரிவித்தார். அதோடு அணை கட்டுவதற்குண்டான முன்னேற்பாடு பணியாக தண்ணீர் மதகு அணை வழியாக வெளியேறுவதை நிறுத்தும் விதமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கவும், அதனை சுற்றி மண் சாலை அமைத்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக துரிதமாக பணியை மேற்கொண்டு தற்போது பணி நிறைவு பெற்றுள்ளது. அணை உடைந்தால் பேராபத்து நிகழும் என்ற நிலையில் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் வேதனையில் இருந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் தற்போது அணையிலிருந்து வெளியேறும் நீர் சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.கடந்த 4 நாட்களாக இரவு பகல் பாராமல் இப்பணியில் ஈடுபட்டு வந்த கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்வம், செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் தன்ராஜ், கார்த்திக் உள்ளிட்ட நீர்வளத்தறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலுவலர்களை மாவட்ட கலெக்டர் கவிதாராமு வெகுவாக பாராட்டினார்.

Related Stories: