அதிமுக தொண்டர் குறித்து அவதூறு; தெருவில் போகிற நாய் தேர்தலில் நின்றால் எப்படி?.. திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை பேச்சு

திருப்பரங்குன்றம்: மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் சக கட்சியை சேர்ந்தவரை ‘‘தெருவில் போகிற நாய்’’ என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவரை விரட்டி விட்டார்கள் என கூறுகின்றனர். அதிமுகவில் தகுதி படைத்தவர்கள் உள்ளனர்.

தகுதியற்றவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை. அதிமுகவில்தான் யார் வேண்டுமானாலும் பதவிக்கும், தலைமை பொறுப்புக்கும் வரலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எடப்பாடி, ஓபிஎஸ். அதே நேரத்தில் தகுதியே இல்லாத ‘‘தெருவில் போகிற நாய்’’ நானும் தேர்தலில் நிற்பேன் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதனால்தான் நம் தொண்டர்கள் அவர்களை விரட்டி விட்டனர்’’ என்றார். தனது சக கட்சி தொண்டரையே ‘‘தெருவில் போகிற நாய்’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியதைக் கேட்டு, அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர்.

சர்ச்சை பேச்சுக்கும், உளறலுக்கும் பஞ்சமில்லாதவர் திண்டுக்கல் சீனிவாசன். ‘‘ஜெயலலிதா கொள்ளையடித்ததை டிடிவி.தினகரன் செலவு செய்கிறார்’’ என்று பொதுக்கூட்டத்திலேயே பேசி, புயலை கிளப்பினார். தொடர்ந்து பிரதமர்கள் பெயரை மாற்றி பேசி வருபவர். தற்போது, ‘‘நாய்’’ என தனது கட்சித் தொண்டரையே விமர்சித்துப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Related Stories: