வேலூர்: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த தோலப்பள்ளி ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 100நாள் வேலைத்திட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வேலை செய்து வருகின்றனர். அதன்படி ஏரி கால்வாய் சீரமைத்தல், கோயில் குளம் தூர் வாருதல், சாலை சீரமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பணிதள பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வருகை, பணி போன்றவை அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் தொழிலாளர்கள் பணிக்கு வராமலேயே, பணிக்கு வந்ததாக கணக்கு காட்டப்பட்டு மோசடி நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் போலி வருகை பதிவேட்டில் மோசடி செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
