மலையான்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கட்டிடம்-பொதுமக்கள் கோரிக்கை

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி ஒன்றியத்திற்குட்பட்ட மலையான்குளம் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வசதிக்காக மலையான்குளம் கிராமத்திற்குள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சமீபத்தில் ‘‘தூய்மை இந்தியா” திட்டத்தின் கீழ் மாநில அளவிலான விருதும், ‘‘பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கற்போம் எழுதுவோம்” இயக்கத்தின் கீழ் மாநில விருதும் கிடைத்துள்ளது.

இப்பள்ளியில் கடந்த 1964ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் 1 முதல் 3ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்தது.

கட்டிடம் பழமையானதால் சிதலமடைந்து தற்போது மழைநீர் ஒழுகி வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி மற்றொரு கட்டித்தில் மேற்கண்ட வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சேரன்மகாதேவி யூனியன் சேர்மன் பூங்கோதை குமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கனகமணி கஸ்தூரிபாய், ராணி, திருவிருத்தான்புள்ளி ஊராட்சி தலைவர் இளையபெருமாள் ஆகியோர் நேற்று பள்ளியை பார்வையிட்டு மாணவர்களின் பெற்றோர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகளிடம் முறையிட்டு பெற்றுத்தருவேன் என தெரிவித்தனர். கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு மாணவர்களின் நலன்கருதி விரைந்து புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வேண்டுகோளாகும்.

Related Stories: