சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்: குறைந்தளவு பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம்:  சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவ விழா வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று கோயிலில் கொடியேற்றப்பட்டது. கோயிலுக்கு உள்ளே உள்ள கொடி மரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் பூஜைகள் செய்து கொடியேற்றி, திருவிழாவை துவக்கி வைத்தார். இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்றனர். கோயில் திருவிழாவையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன், சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழாவை கோயிலுக்குள்ளேயே நடத்துவது எனவும், திருவிழா நடைபெறும் நேரங்களில் பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது எனவும், மற்ற நேரங்களில் பக்தர்கள் சுவாமியை வழிபடலாம் எனவும் வருவாய் துறையினர் அறிவுரை வழங்கி இருந்தனர். ஆனால் நேற்று நடந்த கொடியேற்ற விழாவில் பக்தர்களுக்கு தீட்சிதர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை. குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 19ம் தேதி தேரோட்டமும், 20ம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் என தீட்சிதர்கள் அறிவித்துள்ளனர். சிவபக்தர்கள் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மார்கழி மாத திருவாதிரை தரிசன விழாவில் அனைத்து பக்தர்களும் கலந்து கொள்வதற்கும், கோயில் தேரோட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்றனர்.

Related Stories: