சேலத்தில் மறைந்த வீரபாண்டி ராஜா படம் திறப்பு முன்னோடிகள் செய்த தியாகத்தால் திமுக ஆட்சியில் இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சேலம்: வீரபாண்டி ஆறுமுகம் போன்ற முன்னோடிகள் செய்த தியாகத்தால்தான் இன்றைக்கு திமுக ஆட்சியில் இருக்கிறது என்று சேலத்தில் மறைந்த வீரபாண்டி ராஜாவின் படத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சேலத்தில் மறைந்த திமுக தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் வீரபாண்டி ராஜாவின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.  திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வீரபாண்டி ராஜாவின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது: சேலத்தை பற்றி யார் பேசினாலும், வீரபாண்டியார் பெயரை விட முடியாது. அந்த அளவிற்கு சேலத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தியுள்ளார். நான், இளைஞரணி செயலாளராக, மேயராக, உள்ளாட்சி துறை அமைச்சராக, துணை முதல்வராக இருந்தபோது சேலத்திற்கு என்னை அழைத்து வந்து அரசு, கட்சி நிகழ்ச்சிகளை வீரபாண்டியார் நடத்தியிருக்கிறார்.

வீரபாண்டி ராஜாவும், 2019ல் மறைந்த வீரபாண்டியாரின் ‘‘திராவிட இயக்க வரலாற்றில் என் பெயர்’’என்ற நூலை வெளியிடச் செய்தார். வீரபாண்டியார் போல் பலரும் கட்சியை குடும்பமாக எண்ணி உழைத்ததால் தான், இன்றைக்கு திமுக வளர்ந்து கம்பீரமாக நிற்கிறது. சென்னை அறிவாலயம் மட்டுமின்றி, மற்ற மாவட்டங்களிலும் அண்ணா மாளிகை, கலைஞர் மாளிகைகள் இருக்கிறது. அவை அனைத்தும் கல், செங்கல், மணலால் கட்டப்பட்டவில்லை. கட்சி முன்னாேடிகளின் ரத்தத்தாலும், தியாகத்தாலும் கட்டப்பட்டு உயர்ந்து நிற்கிறது. வீரபாண்டியார் போன்ற முன்னோடிகள் செய்த தியாகத்தால் திமுக ஆட்சியில் இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய ஆட்சி வேண்டும். ஆட்சி அமைய கட்சி வேண்டும். அந்த கட்சியை வளர்த்து உயர்த்தியோரின் தியாகத்தை மதிப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: