திருமணமான 3 வாரங்கள் சேர்ந்து வாழ வெறுப்பு கணவனை கொலை செய்ய கூலிப்படை அனுப்பிய மனைவி: குட்டு அம்பலமானதால் தூக்கில் தொங்கினார்

கூடலூர்: திருமணமான 25 நாளில், புதுப்பெண் தற்கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேர்ந்து வாழ விரும்பாமல் கணவரை கொலை செய்ய கூலிப்படை அனுப்பிய விஷயம் வெளியே தெரிந்ததால், தூக்கில் தொங்கியது தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டம், கம்பம், உலகத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் (24). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (21) கடந்த மாதம் 10ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த 2ம் தேதி புதுமணத் தம்பதிகள் தம்மணம்பட்டி பகுதியில் உள்ள தொட்டிப்பாலத்தை பார்க்க ஸ்கூட்டியில் சென்றனர். திரும்பி வரும்போது ஸ்கூட்டி பழுதாகியுள்ளது. அப்போது பின்னால் வந்த கார், கவுதம் மீது மோதுவதுபோல் வந்துள்ளது. இதில் மயிரிழையில் விலகி கவுதம் உயிர் தப்பினார். காரில் வந்தவர்கள் கவுதமை தாக்கியுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் வரவும், அவர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசில் கவுதம் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கவுதம் மீது காரால் மோத வந்தவர்கள், கம்பம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் நிரஞ்சன் ராஜா (20), கார் டிரைவர் பிரதீப் (35), நிரஞ்சன் ராஜா நண்பர்களான மனோஜ்குமார் (19), லோகு மகன் ஜெட்லி  மற்றும் 17, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் என தெரிய வந்தது. இதில் ஜெட்லியை தவிர 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், புவனேஸ்வரிக்கு விருப்பமில்லாமல் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாததால், அவரை கொலை செய்ய புவனேஸ்வரி முடிவு செய்துள்ளார். கடந்த 2ம் தேதி இது குறித்து தனது நண்பர் நிரஞ்சன் ராஜாவிடம் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். இதன்படி, அவர் உட்பட 6 பேரும் தொட்டிப்பாலம் சென்று திரும்பிய கவுதமை கார் ஏற்றி கொல்ல முயன்றது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகள் சிக்கியதால், தாமும் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் கடந்த 8ம் தேதி புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Related Stories: