10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த பிப்ரவரி 26ம் தேதி தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அதில் முகாந்திரம் இல்லை எனக்கூறி சட்டத்தை ரத்து செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உட்பட 12க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் பண்ருட்டி எம்.எல்.ஏவும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவருமான வேல்முருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிவபாலமுருகன் உச்ச நீதிமன்றத்தில் புதிய மேல்முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டு விவகாரத்தில் சட்ட விதிமுறைகளை மீறி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதற்கான சட்டத்தை ரத்து செய்துள்ளது. அதனால் அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அத்தனை வழக்குகளும் ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும்.

Related Stories: