குகை வழிப்பாதை அருகில் சாலையில் தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

குளித்தலை: கரூர் மாவட்டம் திருச்சி கரூர் புறவழிச்சாலையில் குளித்தலையில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி இருக்கும் சிவத்தலங்களில் ஒன்றான கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் சென்று வருகின்றனர். மேலும் வெளி ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுவட்டாரங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்காலங்களில் காவிரி கடம்பன் துறையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் புனித நீர் எடுத்து சென்று சிறப்பு அபிஷேகம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் இறப்பு நிகழ்ச்சிக்கு இறுதி சடங்கிற்காக ஏராளமானோர் இவ்வழியாகத்தான் சென்று வரவேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் குளித்தலை நகர மையப்பகுதியாக இருப்பதால் திருச்சி கரூர் புறவழிச் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த கடம்பன்துறை குகை வழி பாதை மேல் புறத்திலிருந்து தான் இறங்கி வர வேண்டும். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் இருபுறமும் பள்ளம் இருப்பதால் ஒரு சில நேரங்களில் வெளியூரில் இருந்து வரும் வாகனங்கள் தடுமாறி விழுந்து விபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை இருந்து வருகிறது. அதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொதுமக்கள், பக்தர்கள் நலன் கருதி குளித்தலை கடம்பர் கோவில் எதிரே குகை வழி பாதை அருகே இருபுறமும் இரும்பு பிளேட்டால் தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: