கட்டுமான தொழிலாளர்களுக்கான நல வாரியத்தை அபகரிக்க மோடி அரசு முயற்சி: முத்தரசன் குற்றச்சாட்டு

சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கான நல வாரியத்தை மோடி அரசு அபகரிக்க முயல்கிறது என்று முத்தரசன் குற்றம்சாட்டினார். ஏஐடியுசி சார்பில் தமிழ்நாடு கட்டிட கட்டுமான தொழிலாளர்களின் மாநிலக் கோரிக்கை மாநாடு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க தலைவர் நல்லகண்ணு, ஏஐடியுசி மாநில தலைவர் பெரியசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், கட்டிட தொழிலாளர் நலனை காக்கும் வகையில் 21 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்தனர். அந்த மனுவை நல்லகண்ணு, அமைச்சர் சி.வி.கணேசனிடம் வழங்கினார்.  மாநாட்டில், முத்தரசன் பேசுகையில், ‘‘கொரானா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. கட்டுமான தொழிலாளர்களுக்கான நல வாரியத்தில் ரூ.4 ஆயிரம் கோடி உள்ளது. இந்த நல வாரியத்தை மோடி அரசு அபகரிக்க முயல்கிறது. நல வாரியம் ஒன்றிய அரசுக்கு சென்று விடாமல் முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.

* குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாகும்

அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அமர கட்டாய இருக்கை வசதியை ஏற்படுத்தி சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர். இந்த சட்டம் அண்மையில் தான் அரசாணையாக வந்துள்ளது. விரைவில் செயல்பாட்டுக்கு வரும். கட்டுமான தொழிலாளர்களுக்கு தனியாக ரூ.4000 கோடி நிதி உள்ளது. அதிலிருந்து இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் முடிவெடுப்பார். குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது தான் முதல்வரின் எண்ணம். எங்கெல்லாம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரோ, அங்கெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: