கல்வராயன்மலையில் இன்று ஏடிஜிபி தலைமையில் தீவிர சாராய ரெய்டு: ஐஜி, எஸ்பி உள்ளிட்ட 150 போலீசார் பங்கேற்பு

சின்னசேலம்: கல்வராயன்மலையில் இன்று ஏடிஜிபி தலைமையில் ஐஜி, எஸ்பி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பரந்து விரிந்த மலைப்பகுதி ஆகும். இந்த மலையில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், சாராய ஒழிப்பு போன்ற பணிகளை செய்யவும் மிக குறைந்த அளவே கரியாலூர் காவல் நிலையத்தில் போலீசார் உள்ளனர். இதனால் அவர்களையும் மீறி சில இடங்களில் கள்ளச்சாராய தொழில் நடந்து வருகிறது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாஉல்ஹக் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் கல்வராயன்மலையில் அடிக்கடி சாராய ரெய்டுகள் நடத்தி வருகின்றனர்.

அதனையும் மீறி கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன. இதையடுத்து கல்வராயன்மலையில் இன்று ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் ஐஜி கபில்குமார் சரத்கார், சென்னை மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பி பெருமாள், கள்ளக்குறிச்சி எஸ்பி ஜியாஉல்ஹக், டிஎஸ்பிக்கள் ரவிச்சந்திரன் (மதுவிலக்கு), ராஜலட்சுமி (சட்டம் ஒழுங்கு) உள்ளிட்ட 150 போலீசார் பல்வேறு கிராமங்களில் அதிரடியாக சாராய ரெய்டு நடத்தினர். இதனால் மலைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: