வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு போலி ஆணை கொடுத்து 10 கோடி மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது

தண்டையார்பேட்டை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கி தருவதாக கூறி, போலி ஒதுக்கீடு ஆணை கொடுத்து 10 கோடி மோசடி செய்த ஒரு பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.சென்னை மண்ணடி ராமசாமி தெருவை சேர்ந்த முனியசாமி (44), கடந்த வாரம் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ராயபுரம் பி.சி., பிரஸ் தெருவை சேர்ந்த சரோஜா (43) என்பவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி என எனக்கு அறிமுகமானார். அவரும், அவரது கூட்டாளிகளான புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம் (45), ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (41) ஆகியோர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், குறைந்த விலையில் பலருக்கு வீடு வாங்கி கொடுத்துள்ளோம்.

உங்களுக்கும் வீடு வேண்டும் என்றால் கூறுங்கள், குறைந்த விலையில் வாங்கி தருகிறோம், என்றனர். நானும் அதை நம்பினேன். இதையடுத்து, வீடு வாங்கி தருவதற்காக சரோஜா என்னிடம் 15 லட்சம் கேட்டார். அதற்கு நான், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன். இறுதியில், 12 லட்சம் கொடுக்கும்படி சரோஜா கூறினார். அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு சரோஜாவிடம் 12 லட்சம் கொடுத்தேன். பின்னர், எனக்கு செம்மஞ்சேரியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சரோஜா உள்பட மூவரும் கூறினர். அதற்கான ஒதுக்கீட்டு ஆணை மற்றும் வீட்டு சாவியையும் வழங்கினர். இதையடுத்து, நான் மேற்கண்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சென்றபோது, இவர்கள் வழங்கியது போலி ஒதுக்கீட்டு ஆணை என்பது தெரியவந்தது.

எனவே, போலி ஒதுக்கீட்டு ஆணை வழங்கி, பண மோசடியில் ஈடுபட்ட அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மாலை சரோஜா, ஆறுமுகம், வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில், இவர்கள் முனியசாமியிடம் பணம் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவரைப்போல் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 10 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதும், பாதிக்கப்பட்ட பலர் இவர்கள் மீது புகார் அளித்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, சரோஜா, ஆறுமுகம், வெங்கடேசன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜெகதீஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

More