அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு: தேர்தல் ஆணையராக செயல்பட்ட பொன்னையன் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் சமீப காலமாக நிலவி வரும் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கட்சியின் செயற்குழு கூடி கட்சி விதிகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த விதியில் கட்சித் தலைமையை ஏற்கும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒரே சமயத்தில் போட்டியிடுவார்கள் என்றும், அவர்களை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள் எனவும் திருத்தப்பட்டது. அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுதாக்கல் 3, 4 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுகவில் நடைபெறும் தேர்தலில் முறைகேடு உள்ளது என்றும் இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக முன்னாள் எம்பியும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி.பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார். மேலும் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்றும், வாக்காளர் பட்டியலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தனது மனுவில் குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஆனால் தேர்தலுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஒருவேளை தேர்தலில் முறைகேடு நடந்தது தெரியவந்தால் முடிவுகளுக்கு தடைவிதிக்க நேரிடும் எனக் கூறிய உயர்நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் மனுவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ், பொன்னையன் பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் எம்ஜிஆர் காலத்து தொண்டரான சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஓமபொடி பிரசாத் சிங் என்பவர் மட்டும் விருப்ப மனு வாங்க வந்தார். ஆனால் அவரை அங்கிருந்த அதிமுகவினர் விரட்டி அடித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில், அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், மனோகரன் உள்ளிட்ட 12 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த 4ம்தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தங்கள் மனுக்களை தேர்தல் நடத்தும் ஆணையர்களான சி.பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் சமர்ப்பித்தனர். கட்சி விதிகளின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை 15 பேர் முன்மொழிய வேண்டும், 15 பேர் வழிமொழிய வேண்டும். ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் அதிமுகவின் நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் அவர்களின் பெயர்களை பரிந்துரை செய்தனர். இவர்களின் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வந்தது. தற்போது அவர்கள் மனு ஏற்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அதனால், இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியது. இதனை தொடர்ந்து வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், அதன் பிறகு இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகிய பின்பு, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் வெற்றிச் சான்றிதழை வைத்து இருவரும் மரியாதை செலுத்தினர். 

Related Stories:

More