அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான்!: சசிகலா, டி.டி.வி. தினகரன் இனி இணைய முடியாது...கடம்பூர் ராஜூ திட்டவட்டம்..!!

சென்னை: அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்று அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் பேசிய அவர், கட்சியின் இரட்டை தலைமை குறித்து செயற்குழுவை தொடர்ந்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். சசிகலா, டி.டி.வி. தினகரன் அதிமுகவில் இனி இணைய வாய்ப்பில்லை என்று கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக தெரிவித்தார். இதுகுறித்து கடம்பூர் ராஜூ பேசியதாவது, நாடாளுமன்ற பொதுத்தேர்தல், சட்டமன்ற பொதுத்தேர்தல், கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் இரட்டை தலைமையை ஏற்றுக்கொண்டு, இரட்டை தலைமையே வழிநடத்தி இன்று தேர்தலை சந்தித்து வருகிறோம்.

இனிமேல் இரட்டை தலைமை தான் எங்களுக்கு வழி என்ற நிலைப்பாட்டிலேயே ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதிமுகவில் புதிய விதி கொண்டு வரப்பட்டு கட்சியை கட்டுப்படுத்தும் இரு பதவிகளுக்கு ஒற்றை வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார். சசிகலா குறித்தான கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ, சசிகலா, டி.டி.வி. தினகரன் அதிமுகவில் இனி இணைய முடியாது. ஜெயலலிதாவை தவிர பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு யாரும் கிடையாது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இனி வருவது நடக்காத செயல் என்று கருத்து தெரிவித்தார்.

Related Stories: