கடம்பத்தூர் - சென்ட்ரல் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்

திருவள்ளூர்: நெரிசல் நேரங்களில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடம்பத்தூரில் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். சங்க செயலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். துணை தலைவர் சுப்பிரமணி வரவேற்றார்.  கூட்டத்தில், கடம்பத்தூர் ரயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை அமைக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும். ரயில்வே மேம்பாலத்தில் பேருந்து பயணிகள் இறங்கி ரயில் நிலையம் செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும்.

ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் ரிட்டர்ன் டிக்கெட் வழங்க வேண்டும். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் குறைந்தபட்ச கட்டணம் ₹10 ஆக இருப்பதை ₹5 ஆக குறைக்க வேண்டும். நெரிசல் நேரங்களில் கடம்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் பாதசாரிகள் பாதுகாப்பு கருதி சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

Related Stories: