இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் பாட்டில், கற்களை எறிந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

ராமேஸ்வரம்: மீன் பிடிக்கச் ெசன்ற மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் பாட்டில்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 10 விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசி விரட்டிய சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நான்கு ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் மீனவர்கள் தங்களது படகுகளுடன் வேகமாக அங்கிருந்து வேறு இடங்களுக்குச் சென்றனர்.ஆனால் இலங்கை கடற்படையினர், அவர்களை தொடர்ந்து விரட்டி வந்தனர். ரோந்து கப்பல்களால், படகுகள் மீது மோதுவது போல இலங்கை கடற்படையினர் விரட்டி வந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.

இதில் 10 விசைப்படகுகளை மறித்த இலங்கை கடற்படையினர், அந்த படகுகளில் இருந்த வலைகளை பறித்து, வெட்டி கடலில் வீசினர். இதனால் அச்சமடைந்த மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள், வேகமாக அங்கிருந்து கிளம்பினர்.

ஆழம் குறைவான பகுதிகளில் மீன் பிடித்து விட்டு, நேற்றுகாலை குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையென்றால் மீன்பிடித் தொழிலை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்’’ என்றனர்.

Related Stories: